திங்கள், 15 அக்டோபர், 2018

தாமிரபரணி புஷ்கரம் வரலாறு


நெல்லை தாமிரபரணியில் மகாபுஷ்கர விழா தொடங்கியுள்ளது. இனி தாமிரபரணி நதியின் மகிமையையும், அது பிறந்த வரலாற்றையும் காணலாம்.



குருபகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி, 11.-10-.2018 அன்று இரவு 7.17 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதாவது தாமிரபரணி நதியில் குருபகவான் பிரவேசிக்கிறார். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு புண்ணிய நதியில் நீராடக் கூடாது என்பதால், 12-10-2018 (வெள்ளி) அன்று காலை தாமிரபரணி புஷ்கர விழா நெல்லையில் தொடங்கியுள்ளது.

கி.பி. 1874-ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த ஆண்டு “மஹா புஷ்கரம்” என்ற மகோன்னத நிலையை, பெரும் மகிமையை தாமிரபரணி நதி அடையவிருக்கிறது. ‘மஹா’ என்றால் ‘பெரிய’ என்று பொருள். அகில ரூபமாக விளங்கும் இறைவனின் சொரூபமாகவே இந்நதி மாறி விடுகின்ற காலம் இது.

இதனால் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள மண்ணும் மகா பவித்திரம் (தூய்மை) ஆகிறது. அதை நெற்றியில் பூசிக் கொள்வதாலேயே கங்கையில் நீராடிய பலன் கிடைக்கிறது. தாமிரபரணியிலிருந்து வீசும் காற்று தன் தேகத்தில் படுவதாலேயே ஆத்மா புனிதமடைகிறது. இனி தாமிரபரணி நதியின் மகிமையையும், அது பிறந்த வரலாற்றையும் காணலாம்.

சிவபெருமானால் உருவாக்கப்பட்ட நதி :

சிவபெருமான், பார்வதி தேவியாரைக் கைலாய மலையில் திருமணம் செய்த பொழுது, தேவர் முதலியோர் வடதிசையில் வந்து குவிந்ததால் தென்திசை உயர்ந்தது. இதை சமப்படுத்த எண்ணிய சிவபெருமான் அகத்திய முனிவரை அழைத்து, “தென்நாடு செல்க” எனக் கட்டளையிட்டார். அக்கட்டளைக்கு அடிபணிந்த அகத்தியர் சிவபெருமானிடம், “அது தமிழ்நாடு. தமிழ் பாஷை தமக்குத் தெரியாது. ஆகவே அதை எமக்கு சொல்லித் தருக” எனக் கேட்டனர்.

சரி, இந்த 12 நாள் நீராடல் என்ற கணக்கு எப்படி வந்தது?

ஜோதிட சாஸ்திரப்படி ராசிகள் மொத்தம் 12. ஒவ்வொரு ராசிக்கு ஒரு நாள் வீதம் 12 ராசிக்காரர்களுக்கு 12 நாள் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதன் விபரம் வருமாறு:-

வ.எண்.  - தேதி -  கிழமை ராசி

1.    12.10.2018     (வெள்ளி)          விருச்சிகம்
2.    13.10.2018      (சனி)                  தனுசு
3.    14.10.2018     (ஞாயிறு)          மகரம்
4.    15.10.2018     (திங்கள்)           கும்பம்
5.    16.10.2018     (செவ்வாய்)     மீனம்
6.    17.10.2018 (புதன்)                     மேஷம்
7.    18.10.2018     (வியாழன்)       ரிஷபம்
8.    19.10.2018     (வெள்ளி)          மிதுனம்
9.    20.10.2018 (சனி)                       கடகம்
10.    21.10.2018 (ஞாயிறு)            சிம்மம்
11.    22.10.2018 (திங்கள்)              கன்னி
12.    23.10.2018 (செவ்வாய்)        துலாம்

ஒவ்வொருவரும் தமது ஜென்ம ராசிக்குரிய தேதி, கிழமையில் நீராடுவதால் முழுப்பலன் கிட்டும்.குடும்பத்தலைவரோடு தொலை தூரத்திலிருந்து நீராட வருகின்றவர்கள் குடும்பத் தலைவரின் (தந்தையின்) ஜென்ம ராசி எதுவோ அந்த ராசிக்குரிய நாள், கிழமையில் நீராடினாலே போதும். அது குடும்பம் முழுவதும் பிரகாசத்தைக் கொண்டு வரும்.

மலர் தூவி வழிபடுதல் :

நல்ல மனதுக்குப் புறச்சின்னமாய் அமைந்திருப்பது மலர். அதனிடத்துப் புதுமையும், எழிலும், மணமும் திகழ்ந்து கொண்டிருக்கின்றன. மனது என்றென்றும் மலர் போன்று இருத்தல் வேண்டும். அத்தகைய மனதைக் கடவுளிடத்து ஒப்படைப்பதற்கு அறிகுறியாகக் கையால் மலரை எடுத்துக் கடவுளுக்குத் தூவுகிறோம். அச்செயல் இறைவனுக்கு மிகவும் பிடித்த செயல் ஆகிறது.

சிரார்த்தம் (திதி) கொடுத்தல் :
நதிக்கரையில் பித்ரு காரியம் செய்பவர்கள் ஒரு சிறிய துணிப் பந்தல் அமைத்து அதனடியில் அமர்ந்து இதைச் செய்ய வேண்டும். வெட்ட வெளியில் செய்யக்கூடாது என்பது தர்ம சாஸ்திர விதி.


தாமிரபரணியில் எங்கே நீராடலாம்? :

தாமிரபரணி நதிக்கரை யில் பாபநாசம் முதல் புன்னைக்காயல் (முகத்துவாரம்) வரை மொத்தம் 143 படித்துறைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது.
இதில் எந்த படித்துறையில் வேண்டுமானாலும் நீராடலாம்; திதி கொடுக்கலாம்; தானம் செய்யலாம் என்றாலும் நவகைலாயம் அமைந்துள்ள ஒன்பது சிவ திருத்தலங்களில் நீராடுவது அதிக மகிமை உடையதாகும்.

நடராஜமூர்த்தியின் ஐந்து நாட்டிய சபைகளுள் ஒன்றான “தாமிரசபை” அமைந்துள்ள திருநெல்வேலி தாமிரபரணி நதி “பிரம்ம தீர்த்தம்” எனப்படும். ஆகவே, திருநெல்வேலி நகர் முழுமையும் உள்ள தாமிரபரணி நதியில் நீராடுவதும் அதிகமான நற்பலனைத்தரும். ஆலயம் உள்ள தலத்தில் ஓடும் நதி அதிக சுபகரமானதாகும். அது அதிக சுகத்தையும் மங்களத்தையும் கொடுக்கும். ஆகவே ஆலயம் உள்ள இடங்களில் நீராடுவது நல்லது.


யாகம் நடத்துதல் :

உலக மக்கள் நலன் கருதி புஷ்கர தீர்த்தக் கரையில் 12 நாட்களும் யாகம் நடத்த வேண்டும் என்று பத்மபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.தாமிரபரணி நதி பாய்கின்ற ஊர்களில் வசிக்கின்ற மக்கள் எல்லாம் ஒன்று கூடி யாகம் நடத்தினால் ஊர் செழிக்கும், ஒற்றுமை மேலோங்கும் என்று சொல்லப்பட்டு உள்ளது. ஒவ்வொரு ராசிக்காரர்கள் ஒன்று கூடி நிதி திரட்டி இந்த யாகத்தை நடத்தி நன்மை பெறலாம்.
பஜனை, தியானம் :

இறைவன் ஆட்சி புரியும் உன்னதமான தாமிரபரணி நதிக் கரையில் விடியற்காலை சாத்வீகமான நேரத்தில் பிரார்த்தனை, தியானம், காயத்ரி ஜபம், பிராணாயாமம், பஜனை, ஜபம், நாம சங்கீர்த்தனம் இவைகளைச் செய்வதால் சாந்தி, ஆனந்தம், விவேகம், வைராக்கியம் எல்லாம் கிடைக்கும். பிரம்ம முகூர்த்தத்தில் 15 நிமிடம் தியானம் செய்தால் வேறு காலத்தில் இரண்டு மணி நேரம் தியானம் செய்ததற்கு சமமாகும்.

எல்லா மொழிகள் பேசும் மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சாதுக்கள், ஞானிகள், தபஸ்விகள், ஆன்மீகப் பெரியவர்கள் இந்த விழாவில் பங்கேற்கவிருக்கிறார்கள். வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானோர் இங்கு வருகை தர விருப்பம் கொண்டு அதற்கான செயல்களில் ஈடுபட்டு இருக்கிறார்கள். தாமிரபரணி நதி தீரம் இப்போதே தீபங்களால் சுடரொளியுடன் பிரகாசிக்கத் தொடங்கி விட்டது.
தாமிரபரணி மகாத்மியம் :

வட இந்தியாவில் உள்ள கங்கை, யமுனை, சரையூ போன்ற நதிகளுக்கு ஈடாக தென்னிந்தியாவில் தாமிரபரணி மிகவும் பிரசித்தி பெற்றது. இதன் பெருமையை உணர்ந்த வேத வியாசர் தனது மகனாகிய சுக பிரம்ம ரிஷிக்கு தாமிரபரணியின் பெருமையை உபதேசம் செய்தார். அந்த உபதேச நூல்தான் ஸ்ரீதாமிரபரணி மகாத்மியம். 
தாமிரபரணியில் கல்கி அவதாரம் :


தாமிரபரணி நதிக்கரையில்தான், தசாவதாரத்தில் நிறைவான அவதாரமான கல்கி அவதாரம் நிகழப்போவதாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது.

தாமிரபரணி கடலில் சங்கமிக்கும் முகத்துவாரத்தில் உலகத்திலேயே மிக அரிதான விலை உயர்ந்த முத்துக்கள் விளைந்ததாக இலக்கியங்களும் வரலாறும் பேசுகின்றன.

 தாமிரபரணி பொதிகை மலையில் இருந்து சமவெளி பகுதியில் பாயும் முதல் இடமான பாபநாசத்தில் சித்தர்கள் கோட்டம் ஒருங்கிணைப்பில் தமிழ் ஆகம முறைப்படி 16 வகை தீப ஆராதனைகள் தாமிரபரணிக்கு வழிபாடு செய்ய உள்ளனர்.  
மேலும் அகத்தியர் மாமுனிவரின் 10 அடி உயர திரு உருவச் சிலை விழா மேடை அருகே வைக்க பட உள்ளது.

சில வீடியோக்கள்  இணைப்பு :






அன்புடன்:
E.M .செல்வம்.